★ அயர்லாந்தில் உள்ள அனைத்து கவுண்டிகளிலும் உள்ள தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவும், அதன் மூலம் தமிழ்ச் சமூகம் ஒற்றுமையாக இருப்பதின் அவசியத்தை நம் குழந்தைகள் மத்தியில் எடுத்துச் செல்லவும் தமிழச் சங்கம் அமைவது இன்றியமையாததாகிறது.
★ நாம் வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற போது, நாம் அனைவரும் ஒரே குடும்பமாக தமிழ்ச் சங்கத்தின் மூலம் இணைந்து, தமிழர் அடையாளம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு கற்பித்தல் அவசியத் தேவையாகிறது.
★ தமிழ்க் குழுக்கள் பல இருந்தாலும், அக்குழுக்கள் ஒரு சில நகரங்களில் மட்டும் தனிப்பட்ட குழுக்களாகச் செயல்பட்டு வருகின்றன.
★ இவையனைத்தையும் ஒருங்கிணைத்து அனைத்துக் கவுண்டிகளிலும் இருந்து பிரதிநிதித்துவத்துடன் தேசிய அளவில் ஒரு தமிழ்ச் சங்கம் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். தேசிய அளவில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ஒருங்கிணைந்த சங்கம் ஒன்று அமைவது அவசியமாகிறது.
★ சங்கத்தின் நோக்கங்களான கல்வி, சமூக நலன், கலாச்சாரம் மற்றும் ஒருங்கிணைப்பு முதலியவற்றை உள்ளடக்கிய செயல் திட்டங்களினால் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
★ பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆலோசனைகள், பயிற்சிப் பட்டறைகள், அவசரகால நிதி உதவி, தமிழர்களை ஒன்றிணைத்தல், நட்பு வட்டம் விரிவாக்குதல் போன்ற பலன்களையும் பெறலாம். மேலும் பாரம்பரிய, கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டும் பயன் பெறலாம்.★ கவுண்டிகள் மற்றும் நகரங்கள் அளவிலுள்ள தமிழ் அமைப்புகள், அயர்லாந்து முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தைச் சென்றடைய, தேசிய அளவில் நிதி திரட்ட, நிதியுதவிகள் பெற, மற்றும் வேறு தமிழ்ச் சமூகம் தொடர்பான ஆதரவுகளுக்கு தமிழ்ச் சங்கத்தை அணுகலாம்.
★ சமூக மற்றும் அரசியல் தொடர்பான பணிகளுக்குத் தமிழ்ச் சங்கம் மூலம் அழுத்தம் கொடுக்கலாம்.★ அயர்லாந்து தமிழ்ச் சங்கம் CRO-ல் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது. உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்துத் தரவுகளும், தகவல்களும் உறுப்பினர்களின் அனுமதியின்றி வெளியிடப்படாது. அவை எப்போதும் பாதுகாக்கப்படும்.
★ அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சங்கம் இயங்குவதை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.★ சங்கம் அதன் அனைத்து கணக்கு, வழக்குகள் மற்றும் நிதி விபரங்கள் ஒளிவு மறைவின்றி எப்போதும் வெளியிடும். இது தொடர்பான வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மை எப்போதும் பின்பற்றப்படும்.
★ சங்கத்தின் வரவு, செலவு கணக்கு விபரங்கள் அது தொடர்பான ரசீதுகள் மூலம் பெறப்பட்டு அல்லது வழங்கப்பட்டு முறைப்படி வரவு / செலவு புத்தகத்திலோ, மென்பொருளிலோ பதிவு செய்யப்படும், மேலும் விபரங்கள் சீரான இடைவெளியில் இணையதளத்தில் வெளியிடப்படும். ★ உறுப்பினரகளுக்குத் தமிழ்ச் சங்கம் தொடர்பான கணக்கு, வழக்குகள் மற்றும் நிதி விபரங்கள் தொடர்பான சந்தேகங்களை எப்போது வேண்டுமானாலும் எழுப்பி விளக்கம் பெறலாம்.★ இது டப்ளினை மட்டும் சார்ந்த குழுவல்ல, மாறாக அயர்லாந்து முழுவதும் ஒவ்வொரு கவுண்டிகளிலிருந்தும் பிரதிநிதித்துவம் / குழுவைக் கொண்டிருக்க உறுதிபூண்டுள்ளது.
★ அயர்லாந்து தமிழ்ச் சங்கம் மூன்று மட்ட அளவில் (3 Level Approach) செயல்படும். கவுண்டி, பிராந்திய மற்றும் தேசிய அளவில் உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு தன்னார்வலர்களாகப் பணியாற்றுவார்கள்.★ தமிழ் மொழியால் இணைந்து ஒவ்வொரு கவுண்டியிலும் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அடையாளம் கண்டு ஒருங்கிணைத்து அனைத்து மக்களின் ஆதரவுடன் ஒன்றுபட்ட சங்கமாக செயல்படுவதே எங்கள் இலக்கு.
★ அனைத்து கவுண்டிகளிலும் உள்ள தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் உறுப்பினர் சேர்க்கை ஆகத்து 15, 2018 முதல் தொடங்கியது. மேலும் எங்கள் இலக்கை அடைவதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.★ ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் ஒரு சிறிய நிகழ்ச்சி, பயிற்சிப் பட்டறை நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது.
★ ஒரு வருடத்திற்கு ஒருமுறையேனும் அனைத்துக் கவுண்டிகளிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தேசிய அளவில் ஒன்றுகூட திட்டமிடப்பட்டுள்ளது.★ சங்கத்தின் “உதவிக்கரம்” திட்டம் மூலம், தமிழ்நாடு, இந்தியா மற்றும் அயர்லாந்தில் ஏற்படும் சமூக பிரச்சினைகளுக்கு ஆதரவு கரம் நீட்ட ,வருடத்திற்கு நான்கு, நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
★ இலவச உறுப்பினர் பதிவு 2018 ஆம் ஆண்டின் இறுதி வரை வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, ஒரு வருட உறுப்பினர் சந்தாவாக குடும்பத்திற்கு €30 தனி நபருக்கு €15 மாணவர்களுக்கு €10 என்று வரையறுக்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு சங்கத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
★ சங்கத்தின் வலைத்தளத்தைப் பார்வையிட்டு சங்கத்தில் இணையவும். உங்கள் பகுதி தமிழ் நண்பர்களுக்கு செய்திகளை தெரிவித்து, அவர்களையும் பங்களிக்க உதவவும்.
★ நீங்கள் ஏதேனிலும் ஒரு துறையில் நிபுணத்துவம் உடையவராக இருப்பின், தன்னார்வலராக பணியாற்ற விரும்பினால், சங்கத்தை தொடர்பு கொள்ளவும். (எடுத்துக்காட்டாக, கலை, இலக்கியம், இசை, மருத்துவம் மற்றும் பல).★ சங்கத்தின் பதிவைத் தொண்டு நிறுவன நிலையைப் பெற (charity status) விண்ணப்பித்துள்ளோம், ஆனால் புதிதாக பதிவுசெய்யப்பட்ட அமைப்பு என்பதால் அந்த நிலையைப் பெற சிறிது காலம் ஆகும் என்பதால் அதுவரை வரி விலக்கு இல்லை.
★ எந்தவொரு தகுதி வாய்ந்த உறுப்பினரும் ( விதிமுறைகளுக்கு உட்பட்டு) சங்கம் தொடர்பான தேர்தல்களில் போட்டியிட முடியும்.
★ அயர்லாந்தில் உள்ள ஒவ்வொரு கவுன்டிகளிலும் போட்டியிட்டு பிரதிநிதித்துவம் கிடைக்க அனைத்து உறுப்பினர்களையும் சங்கம் ஊக்குவிக்கிறது.★ அயர்லாந்து குடியரசில் குடியேறியத் தமிழ் தொடர்புடைய யாராகிலும் அல்லது குடும்பத்தினரும் உறுப்பினராகலாம்.
★ தமிழ்ச் சங்கத்தின் தொலை நோக்கு, குறிக்கோள், மற்றும் இலக்குகளை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.